வடக்கு, கிழக்கில் 11,980 ஏக்கர் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 185.73 ஏக்கர் நிலங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தளபதியை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டில் இரண்டு மாகாணங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 85,549 ஏக்கர் நிலங்களில், ஒக்டோபர் 28-ஆம் நாள் நிலவரப்படி 73,568 ஏக்கர் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதில் 49,304 ஏக்கர் அரசு நிலங்களும், 24,264 ஏக்கர் தனியார் நிலங்களும் அடங்கும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 25,196 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 209 ஏக்கர் அரசு நிலங்களையும், 11.23 ஏக்கர் தனியார் நிலங்களையும் சிறிலங்கா இராணுவம் விடுவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 160 ஏக்கர் அரசு நிலங்களையும், 25 ஏக்கர் தனியார் நிலங்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு நிலப்பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன; இதில் ஆலங்குளம் கிராம அதிகாரி பிரிவில் 48 ஏக்கரும், அம்பகாமம் கிராம அதிகாரி பிரிவில் 9 ஏக்கரும் அடங்கும்.
அம்பாறையில், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான 102 ஏக்கர் நிலப்பகுதியை (அலிம்நகர் கிராம அதிகாரி பிரிவில் உள்ள நிலம்) விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடுவிக்கப்படவுள்ள 25 ஏக்கர் தனியார் நிலங்கள், கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி கிராம அதிகாரி பிரிவில் அமைந்துள்ளன; தற்போது இந்த நிலத்தில், சிறிலங்கா இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு (SLEME) முகாம் அமைந்துள்ளது.
இந்த முகாமை பலாலி பாதுகாப்பு வலயத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான காலக்கெடுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 2026 டிசம்பர் 31 ஆக நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம், குறித்த நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 370 ஏக்கர் அரசு நிலங்களையும், 36 ஏக்கர் தனியார் நிலங்களையும் விடுவிக்க சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாளுக்கும் இந்த ஆண்டு ஒக்டோபர் 28-ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறிலங்கா இராணுவம் வடக்கு மாகாணத்தில் 1,296 ஏக்கர் நிலத்தையும், கிழக்கு மாகாணத்தில் 102.96 ஏக்கர் நிலத்தையும் விடுவித்துள்ளது.
முன்னதாக இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட கணிசமான அளவு நிலத்தை, போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, இராணுவம் விடுவித்துள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், தீர்க்கப்படாத உரிமையாளர் கோரிக்கைகள், சட்டச் சிக்கல்கள் மற்றும் நிர்வாக ரீதியான இடர்பாடுகள் காரணமாக சில பகுதிகள் இன்னும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன; மேலும், சில பகுதிகள் செயற்பாட்டு அல்லது மூலோபாயத் தேவைகளுக்காகத் தொடர்ந்து தேவைப்படலாம்.
தனியார் நில உரிமையாளர்களின் நியாயமான உரிமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்; பாதுகாப்புத் தேவைகளுக்கு இனி தேவைப்படாத நிலங்களை விடுவிப்பதை ஆதரிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தை அதன் பரப்பளவை வைத்து மட்டும் தீர்மானிக்க முடியாது.
இயன்றவரை நிலங்களை விடுவிப்பது, சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் மூலம் உரிமையாளர் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது, மற்றும் தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமான பகுதிகளை மட்டும் தொடர்ந்து வைத்திருப்பதே எங்களது அணுகுமுறையாகும்.
இறுதியில், இராணுவம் தொடர்ந்து ஒரு நிலப்பகுதியைத் தன் வசம் வைத்திருப்பது தேசிய அளவில் உண்மையிலேயே அவசியமானதா என்பதை, அந்தந்த நிலப்பகுதியின் தனிப்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தற்போது இந்த இரு மாகாணங்களிலும் 11,980 ஏக்கர் நிலம் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது; வரும் காலங்களில் மேலும் பல நிலங்களை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
