மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதும் விளைவுகளும்
சிறிலங்கா அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, கைது செய்யப்பட்ட சம்பவம், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, நீண்ட மற்றும் வேதனையான நீதிக்கான தேடலில் ஒரு அதிர்வு மாற்றத்தைக் குறிக்கிறது.
குறைந்தது 269 உயிர்களைக் கொன்ற இஸ்லாமிய தற்கொலை குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணை, பல ஆண்டுகளாக, “ஆழ்ந்த அரசு” சதி மற்றும் உயர் மட்ட மூடிமறைப்பு குற்றச்சாட்டுகளால் பின்தங்கியது.
தாக்குதலில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுரேஷ் சாலேயின் கைது நடந்திருக்கிறது, கடந்த காலங்களில் அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் கீழ், 2005 இல் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டதில் இருந்து சுரேஷ் சாலே, அவரது மிகவும் நம்பகமான இராணுவத் தளபதிகளில் ஒருவராக இருந்து வந்தார்.
சாலேயின் கைது என்பது ஒரு இராணுவ அதிகாரியின் கைது மட்டுமல்ல; இது ராஜபக்ச காலத்தில் சிறிலங்காவை ஆட்சி செய்த புலனாய்வுத்துறை இயந்திரத்தின் மையத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், சாலே நீண்டகாலமாக கடுமையான சந்தேகத்திற்குரிய நபராக இருந்து வருகிறார்.
2023 ஆம் ஆண்டு சனல் 4 ஆவணப்படம், குண்டுதாரிகளுக்கும் மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பை எளிதாக்கி, அரசாங்கத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கும், ஒரு பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்கியதாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அவரது பெயர் சர்வதேச கவனிப்புக்குரிய மையமாக மாறியது.
சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற தகவல் வெளிப்படுத்துபவர், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார், அவர் சிறிலங்கா எல்லைக்குள் இன்னும் நேரடி அறிக்கையை வழங்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சாலே இந்தக் கூற்றுக்களை கடுமையாக மறுத்தாலும், அவரது கைது, சதிக் கோட்பாட்டிற்கும் சட்டப்பூர்வ குற்றத்திற்கும் இடையிலானஇடைவெளியைக் குறைக்க, புலனாய்வாளர்கள் இறுதியாக சில தொடர்புகளைக் கண்டறிந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சாலேயின் கைது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டத்தை அவிழ்க்க வழிவகுக்கும் என்றால், உயர்மட்ட இராணுவ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல் “தீண்டத்தகாதவர்கள்” என்று கருதப்பட்ட, சிறிலங்காவில் அதிகாரப்பூர்வ தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சகாப்தத்திற்கு ஒரு சாத்தியமான முடிவைக் குறிப்பதாக இருக்கும்.
இருப்பினும், சாலே இன்னும் சட்டப்பூர்வமாக குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை.
சாலேயின் கைது, அரச புலனாய்வு சேவைக்குள் ஒரு ஆழமான விசாரணையைத் தூண்டுகிறது.
கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே மகத்தான அதிகாரத்தைப் பயன்படுத்தினார், பெரும்பாலும் அவரது நிழலில் செயற்பட்டார் என, முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவரது தடுப்புக்காவல், முன்னாள் புலனாய்வுத்துறை படிநிலையை சுத்திகரிப்பதைக் குறிக்கிறது.
இந்தக் கைது மூலம், உண்மையான சதித்திட்டத்தை அம்பலப்படுத்த முடிந்தால், தாக்குதல்களுக்கு முன்னர் புலனாய்வு சேவைகள் எவ்வளவு அதனை அறிந்திருந்தன, தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா அல்லது அரசியல் ஆதாயத்திற்காக கையாளப்பட்டதா என்பது குறித்து பொது விவாதத்தை ஏற்படுத்தக் கூடும்.
வழக்குத் தொடர்ந்தால், அரச புலனாய்வுத்துறை இஸ்லாமிய தீவிரவாத சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டது என்பதற்கான இயக்கவியலை வெளிப்படுத்தக் கூடும், இது ஒரு தனி நபருக்கு அப்பாற்பட்ட முறையான சிதைவுகளை அம்பலப்படுத்தக் கூடும்.
அரசியல் ரீதியாக, இந்த நடவடிக்கை தற்போதைய நிர்வாகத்திற்கு ஒரு பெரிய சவாலாகும்.
முந்தைய ஆட்சியுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய ஒருவரைக் கைது செய்வதன் மூலம், தேர்தல் பரப்புரையின் போது வாக்குறுதியளித்தபடி, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு, அரசாங்கம் சமிக்ஞை காண்பிக்கிறது.
இருப்பினும், சாலேயை ஒரு போர்வீரனாகவும் உண்மையான தேசபக்தராகவும் பார்க்கும் இராணுவம் மற்றும் தேசியவாத குழுக்களின் சில பிரிவுகளினால், பின்னடைவை ஏற்படுத்தும் அபாயத்தையும் அது கொண்டுள்ளது.
சிறிலங்கா அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தக் கைது சாலேவை ஒரு சந்தேக நபராகக் கருதுவதற்கான தொடக்கமாகவும் இருக்கலாம்.
தாக்குதல்களுக்குப் பின்னால் முக்கியமான மூளையாக இருந்தவர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கு, இந்தக் கைது சிறிலங்காவை நெருக்கமாகக் கொண்டு வருகிறது.
இது கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் சமூகத்தால் தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.
இந்த நடவடிக்கை வெறும் அரசியல் நாடகமாகவோ அல்லது ஆளும்கட்சியின் வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்கான குறுகிய பார்வை கொண்ட உத்தியாகவோ இருந்தால், அரசாங்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அனைத்துலக நிபுணர் கலாநிதி றொகான் குணரத்ன, சாலேயின் கைதுக்குப் பின்னர் ஒரு பத்தியில், இது “அரசியல் நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்.
“அவரது கைதுக்கு காரணமானவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுத்த அலட்சியத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜெனரல் சாலேயின் கைது இரண்டு வகை மக்களால் கொண்டாடப்படுகிறது:
முதலாவதாக, ஈஸ்டர் ஞாயிறு படுகொலையை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள்;
இரண்டாவதாக, சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் மீது பொய்யாகக் குற்றம்சாட்டி, தவறான கதைகள் மற்றும் சதி கோட்பாடுகளைப் பரப்பும் அரசியல் தீவிரவாதிகள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது குறிப்பிடத்தக்க சர்வதேச தாக்கங்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்த சிறிலங்கா தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
சாலே போன்ற ஒரு உயர்மட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், சிறிலங்கா உலக அரங்கில் சிதைந்து போன அதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.
இது சிறிலங்கா அதன் சொந்த பாதுகாப்பு நிறுவனத்தை விசாரிக்கும் திறன் கொண்டது என்ற- சர்வதேச சமூகத்திற்கான ஒரு செய்தியுமாகும்.
எதிர்கால மனித உரிமைகள் தீர்மானங்கள் மற்றும் பொருளாதார உதவிகளில் இது செல்வாக்குச் செலுத்தும்.
ஆங்கில மூலம்- economynext
