கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைத் தளபதி ஆய்வு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) கொழும்பு துறைமுகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவானது, பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது.
அது எமது இரு நாடுகளினதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக சிறிலங்கா துறைமுக அதிகாரசபையுடன், அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் கொழும்பு துறைமுகத்தில் சந்தித்தார்.
சிறிலங்கா தனது கடற்பகுதியினைப் பாதுகாத்து, ஒரு பாதுகாப்பான, வினைத்திறனான கப்பல்களுக்கிடையே சரக்குகளை மாற்றியேற்றும் கேந்திர நிலையத்தினை செயற்பாட்டில் வைத்திருக்கும் போதுதான், சிறிலங்காவிலும் அமெரிக்காவிலும் வர்த்தகம் சீராக நகரும், வணிகங்கள் வளரும், வேலைவாய்ப்புகள் பேணப்படும்.
உலகின் மிக முக்கியமான கடல்வழித்தடங்களின் சந்தியொன்றில் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய விடயங்களில் எமது அமெரிக்க-சிறிலங்கா பங்காண்மை கட்டமைக்கப்பட்டுள்ளது.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


