உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன
2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.
அடுத்த மாதம் உலக வங்கி பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதே இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தடைபட்டுள்ள கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவற்றை முடிப்பது குறித்தும் உலக வங்கி குழுவுடன் கலந்துரையாடப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் நாட்டிற்குத் தேவையான உதவிகள் குறித்தும் இந்தக் குழு கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுவின் வருகைக்கு முன்னதாக, உலக வங்கி குழும நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர், மாலைதீவு, நேபாளம் மற்றும் சிறிலங்காவுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் ஆகியோர் இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள், திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வரும் 17ஆம் திகதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் வரும் 18ஆம் நாள் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
