சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க முடிவு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான, முறைப்பாடு குறித்த விசாரணையைத் தொடங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
அதேவேளை சமிந்த குலரத்ன நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நடைமுறை தவறானது என்றும், அவர் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம்சாட்டி ஆர். கண்ணன் என்ற நபர் அளித்த முறைப்பாடு குறித்து விசாரிக்கவும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆணைக்குழு கூடியபோது இரண்டு முறைப்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு, அவை குறித்து விசாரணைகளைத் தொடங்குமாறு, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான ஆவணங்களை, நாடாளுமன்றத்திடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கோரவுள்ளது.
தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் சமிந்த குலரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தொடர்ச்சியான ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
சட்டவிரோதமாக இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல், அதிகாரபூர்வ வாகனங்களை தவறாகப் பயன்படுத்துதல், நாடாளுமன்ற ஊடக உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல், கட்டணங்களை செலுத்தாமல் நாடாளுமன்றத்திலிருந்து உணவு பெறுதல்; சட்டவிரோதமாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்தல், நாடாளுமன்ற நிதியில் இருந்து அவருக்கு பணம் செலுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தின் செலவில் அவருக்கு உணவு வழங்குதல், இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்துதல்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வெளியிடுவதைத் தடுத்தல், மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களின் நிர்வாகத்தில் சட்டவிரோத தலையீடு என எட்டு குற்றச்சாட்டுகள் சபாநாயகருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
