மேலும்

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான அனைத்துலக தடைகளை அரசாங்கம் ஏற்காது

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான தடைகள் அனைத்துலக சட்டத்திற்கு முரணானது என்றும், இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற  உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய  கேள்விகளுக்கு  பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா படை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக, 2025 மார்ச் மாதம், பிரித்தானியாவினால் தடைகள் விதிக்கப்பட்ட போது, அமைச்சரவையில் ஆராயப்பட்டு,  இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டது.

இத்தகைய தீர்மானங்கள் நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கத் திட்டங்களைப் பாதிக்கும் என்று அரசாங்கத்தின் சார்பில்  கூறியிருந்தோம்.

மேலும், கடந்த காலங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்நாட்டு வழிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்க திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

இதற்கு முன்னர், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் இராணுவ அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மீதும் தடைகளை விதித்துள்ளன.

அந்த வகையில், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை புதியதல்ல.

இருப்பினும், இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடைகள் அனைத்துலக சட்டத்திற்கு  முரணானது.

தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

அரசாங்கத்தின் அனைத்துலக கொள்கையின்படி அனைத்துலக சட்டத்தின்படியே நாங்கள் செயற்படுவோம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *