பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும்
சிறிலங்காவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அனைவருக்கும் நீதி (Justice for All) என்ற அனைத்துலக மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஏற்கனவே உள்ள துஷ்பிரயோகங்களை வலுப்படுத்தி விரிவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், பயங்கரவாதத்தின் வரையறையை விரிவுபடுத்துகிறது, தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்புகளை பலவீனப்படுத்துகிறது.
மேலும் சிறிலங்கா படைகளுக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும், கடந்த கால துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் உண்மையான சட்ட சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைவருக்கும் நீதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
