விரைவாக உதவும் அமெரிக்காவின் திறனுக்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு
விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் திறனுக்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில், கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வெளிநாட்டு உதவி கட்டமைப்பை மிகவும் பதிலளிக்கக் கூடியதாகவும், தூதரகத்தால் இயக்கப்படும் வகையிலும் மறுவடிவமைத்து வருகிறது.
2025இல் அமெரிக்க வெளிநாட்டு உதவி விநியோகத்தின் செயல்திறனை நிரூபித்துள்ளது.
அண்மையில் சிறிலங்காவில் ஒரு நிகழ்வை நடத்தினோம். அவர்களுக்குத் தேவையான உதவியை மிக விரைவாக வழங்க முடிந்தது.
இது அமெரிக்க தூதரகங்கள், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் கிடைக்கக் கூடிய இராணுவ சொத்துக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சிறந்த மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம்.
அமெரிக்க வெளிநாட்டு உதவி மறுசீரமைப்பு இன்னும் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்கு, இது உதவிகளை திறம்பட வழங்குவதாகவும், அமெரிக்க தேசிய நலன்களை முன்னேற்றும் ஒரு பயனுள்ள அமைப்பாகவும் கருதப்படும்.
புதிய அணுகுமுறையின் முக்கிய அம்சம், நாடுகளில் வெளிநாட்டு உதவி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் அமெரிக்க தூதுவர்கள் மற்றும் தூதரகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகும்.
அவர்களின் கட்டுப்பாடு, அதிகாரம் மற்றும் செல்வாக்கு கடந்த காலத்தை விட இப்போது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ரூபியோ மேலும் தெரிவித்துள்ளார்.
