மேலும்

ட்ரம்பின் வரிவிதிப்பால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராதாம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத பழிவாங்கும் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசிடம் இருந்து சிறிலங்கா இனி எரிபொருளை வாங்காது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டு விட்டது.

தற்போது, சிங்கப்பூர், இந்தியா மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்தே,  போட்டி கேள்விப்பத்திர நடைமுறைகள் மூலம், எரிபொருள்  வாங்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எந்தவொரு  ஈரானிய நிறுவனங்களுக்கும் இடையே, எந்த உடன்பாடும் நடைமுறையில் இல்லை.

அமெரிக்காவின் புதிய கொள்கை,  ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள் எந்த எரிபொருள் பற்றாக்குறையையும் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களால், உள்ளூரில் விலைகள் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்டதாகவும்,  சிறிலங்கா ஆண்டுதோறும் 4 – 5 பில்லியன் டொலர் செலவில் எரிபொருளை இறக்குமதி செய்தாலும், புதிய அமெரிக்க வரிகள் தேசிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்காது என்றும் சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூரா நெத்திகுமாரகே, குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *