10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா
அமெரிக்க கடற்படையினால், பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த உலங்குவானுர்திகள் விமானிகளுக்கான பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளின் போது, நாட்டின் வான்வழி திறன்களை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த பரிமாற்றம், அமெரிக்காவின் மேலதிக பாதுகாப்பு கருவிகள் திட்டத்தின் கீழ், , கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெல் ஜெட் ரேஞ்சர் 206 வகையின், இராணுவப் பயன்பாட்டு வகையான, TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானுர்தி, முன்னர் அமெரிக்க கடற்படையால் விமானிகளுக்கான பயிற்சிக்காகவும், படம் பிடித்தல் மற்றும் துரத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
பயிற்சித் தேவைகளுக்கு உதவுவதற்கான செயற்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக இந்த உலங்குவானுர்திகள் சிறிலங்கா விமானப்படையில் இணைக்கப்படும்.
இந்த பரிமாற்றங்களுக்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க கடற்படை சர்வதேச திட்ட அலுவலகத்துடன், நெருக்கமாகப் பணியாற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்ட உலங்குவானுர்திகளை பாகங்களாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் முதல் தொகுதி பிப்ரவரி மாத தொடக்கத்தில் சிறிலங்காவை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

