தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது
தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், சிறப்பு அரசிதழ் அறிவிப்பின் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் தொடர்பாக, இந்த திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்சல் சம்பத் துயகொந்தாவினால் ஜனவரி 6ஆம் நாளிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பின் படி, 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொண்ட ஐக்கிய நாடுகள் ஒழுங்குமுறைகளின் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் வெளியிடப்பட்ட பட்டியல், அவற்றை புதுப்பித்து வெளியிடப்பட்ட பட்டியல்களை மாற்றுவதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
மே 2025 இல் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பதிப்பை புதிதாக திருத்தப்பட்ட பட்டியல் மாற்றுகிறது மற்றும் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளும் தனிநபர்களும் இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், திருத்தப்பட்ட தீவிரவாத பட்டியலில் பெயரிடப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து நிதிகள், நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்குவதற்கு ஐக்கிய நாடுகள் விதிமுறைகளின் கீழ் ஒரு தனி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தகுதிவாய்ந்த அதிகாரி என்ற முறையில் கையெழுத்திட்டுள்ளார்.
