நீர்த்துப்போன ஜெனிவா வரைவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.
ஆனால் இந்த காலஎல்லைக்கு முன்னதாகவே சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனிதஉரிமைகளை மேம்படுத்துதல் சம்பந்தமான பிரேரணை ஜெனிவா பேரவை செயலகத்தில் அனுசரணை நாடுகளால் கையளிக்கப்பட்டு விட்டது.
இந்த பிரேரணையின் முதல் வரைவு,கடந்த 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதை அடுத்து, 15 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடந்த ஒரு முறைசாரா கலந்துரையாடலில், இந்த வரைவு தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அதில் சில விடங்களை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. சில திருத்த முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றின் அடிப்படையில் கடந்த 23ஆம் திகதி அனுசரணை நாடுகள் திருத்தப்பட்ட தீர்மான வரவை சமர்ப்பித்திருக்கின்றன.
இதில் மேலும் திருத்தங்களைச் செய்வதற்கு வரும் முதலாம் திகதி மதியம் வரை காலஅவகாசம் உள்ளது. ஆனால் இனிமேல் புதிய பிரேரணைகளை வைக்க முடியாது.
இலங்கை தொடர்பான பிரேரணையின் இரண்டாவது வரைவு பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது.
இந்த மாற்றங்கள் முதல் வரைவை விட பலவீனமான ஒன்றாக – நீர்த்துப்போக செய்யப்பட்ட ஒன்றாக- காணப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து, சிறிலங்கா தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலாவதாக முன் வைக்கப்பட்ட வரைவை விட, இரண்டாவதாக முன்வைக்கப்படும் வரைவு கனதி குறைவானதாக -நீர்த்துப் போனதாக இருப்பது வழமை.
பல சந்தர்ப்பங்களில் தீர்மான வரைவுகள், பல உள்ளக கலந்துரையாடல்களுக்கு பிறகு பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல இம்முறையும் முதலாவது வரைவை விட இரண்டாவது வரைவில், பல விடயங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
“இராணுவமயமாக்கம், ஊழல் மோசடிகள், ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலின்மை மற்றும் கடந்தகால மீறல்கள் விடயத்தில் தொடரும் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு என்பன உள்ளடங்கலாக, பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு வழிகோலிய காரணிகள் தொடர்பாக, கவனம் செலுத்தித் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்” என முதல் வரைவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
புதிய வரைவில், இராணுவமயமாக்கம் என்ற விடயம் நீக்கப்பட்டிருக்கிறது.
சிறிலங்காவில் இராணுவமயமாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கும் அதுவும் ஒரு காரணம்.
வீங்கி பருத்த படைபலமும் அதற்கான செலவினங்களும், பொருளாதார ரீதியாக இலங்கை நெருக்கடியை எதிர்கொள்வதற்கு பிரதான காரணம்.
பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் வசந்த அத்துகோரள, அண்மையில் ஒரு நேர்காணலில் சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வீக்கம் எத்தகையது எனக் குறிப்பிட்டிருந்தார்.
“சிறிலங்காவின் வேலைப்படையில் ஆயுதப்படையினர் 3.74 வீதமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் இது வெறுமனே 0.84 வீதம் மட்டும் தான். சீனாவில் 0.33, இந்தியாவில் 0.58, இந்தோனேசியாவில் 0.48, அவுஸ்ரேலியாவில் 0.44 வீதமாக உள்ளது.
தெற்காசியாவில் பாகிஸ்தானில் மட்டும் 1.25 வீதமாக இது காணப்படுகிறது“ என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறிலங்கா எந்தளவுக்கு வீங்கிப் பருத்த படையமைப்பை கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதும்.
அண்மையில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் படி, அடுத்த ஆண்டு 455 பில்லியன் ரூபாய் பாதுகாப்பு அமைச்சுக்குத் தேவை என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இது இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட, 423 பில்லியன் ரூபாவை விட அதிகம்.
இராணுவமயமாக்கல் காரணமாகவே போர் இல்லாத சூழலிலும் சிறிலங்கா பெருமளவில் நிதியை பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பாதுகாப்பு சீர்திருத்தங்களின்படி படைக்குறைப்புக்கான காஎல்லைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
இவ்வாறான நிலையில் இராணுவமயமாக்கத்தை பொருளாதார நெருக்கடிக்கான ஒரு காரணியாக முன்வைத்ததில் தவறில்லை.
ஆனால் அது நீக்கப்பட்டதற்கான காரணத்திற்குப் பின்னால், சிறிலங்கா அரசாங்கம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆட்சியில் உள்ள அரசாங்கம், இராணுவமயமாக்கலை பொருளாதார நெருக்கடிக்கான ஒரு காரணியாக ஏற்றுக் கொள்ள மறுப்பது, இராணுவமயமாக்க கொள்கை மீது தற்போதைய அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அதேபோல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கூறும் முதல் வரைவின் பரிந்துரையும் இரண்டாவது வரைவில் நீக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலாக, “ ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் மீது விசேட கவனம் செலுத்துமாறு” திருத்தப்பட்டுள்ளது.
இது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என, சிறிலங்கா அரசுக்கு ஊக்கமளிக்கக் கூடிய விடயமாக இருக்கிறது.
மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்பட்டால் போதும் என்றளவில் இந்த வரைவு நீர்த்துப் போனதாக காணப்படுகிறது.
அதேபோல, “இனப்பிரச்சினை“ என்ற சொற்பதம் நீக்கப்பட்டு வெறுமனே “மோதல்“ என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதுவும் மிக கனதியான ஒரு விடயம் அகற்றப்பட்டிருப்பதை தெளிவாக காட்டுகிறது.
“கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சுயாதீன சிறப்பு சட்டவாளரின் பங்கேற்புடனான பிரத்யேக நீதிப் பொறிமுறை ஒன்றை நிறுவுவது குறித்து, கவனம் செலுத்துமாறு” முன்னைய வரைவில் வலியுறுத்தப்பட்டிருந்த போதும், புதிய வரைவில் அது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக விசேட நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான அழுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான சட்டவாளரின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதிப் பொறிமுறை பற்றிய விடயத்தில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும் அது நீக்கப்பட்டிருக்கிறது. இது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வது பற்றிய அழுத்தங்களை குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுப்பதற்கு உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பது பற்றி வாக்குறுதி கொடுத்திருந்தாலும், அது விசேட நீதிப் பொறிமுறையாக -பிரத்தியேக அதிகாரங்களைக் கொண்ட – ஒரு சுயாதீன அமைப்பாக இருக்காது.
அந்த ஆணைக்குழு உண்மைகளை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்குமே தவிர, குற்றங்களை விசாரிக்கின்ற, தண்டனை வழங்குகின்ற அதிகாரம் படைத்த ஒன்றாக இருக்காது.
இதனை அரசாங்கம் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறது.
இருந்த சூழலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் புதிய வரைவு அதற்கு அழுத்தம் கொடுக்காத ஒன்றாக இருப்பது கரிசனைக்குரிய விடயமாகும்.
முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவை கலப்பு விசாரணை பொறிமுறை ஒன்றை முன்மொழிந்து தீர்மானமாக நிறைவேற்றியது.
அதற்கு இணங்கி விட்டு மைத்திரி- ரணில் அரசு ஐ.நாவின் காலை வாரியது.
ஆனால் இம்முறை அது பற்றிய விடயங்கள் எதுவுமே வரைவில் காணப்படவில்லை.
இந்த வரைவை நிறைவேற்றுவதில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் எதிர்கொள்ளும் சவாலை இது வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த தீர்மான வரைவை நிறைவேற்றுவதற்கு அனுசரணை நாடுகளுக்கு ஆதரவளிக்க பல நாடுகள் தயங்குவதாக தெரிகிறது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கு பல நாடுகள் முற்படுகின்ற சூழலில், அதனைத் தாண்டி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் நாட்டை வைத்திருப்பதற்கு அனுசரணை நாடுகள் விரும்புகின்றன.
அந்த கண்காணிப்பு நிலை தொடர வேண்டுமாயின், நீர்த்துப் போன ஒரு வரைவையே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த வரைவுகளை ஒப்பிட்டு நோக்குகின்ற போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அனுசரணை நாடுகள் பணிந்து போகின்ற தன்மை தெளிவாக தென்படுகிறது.
அது மாத்திரமல்ல அடுத்த இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தாலும், முதல் வரைவில் நான்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
61வது அமர்விலும் 64 வது அமர்விலும் வாய்மொழி அறிக்கைகளையும், 63 வது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும், 66 வது அமர்வில் விரிவான அறிக்கையுடன் விவாதத்தையும் நடத்துவதற்கு முதல் வரைவு முன்மொழிந்திருந்தது.
ஆனால், தற்போதைய வரைவில் வாய்மொழி அறிக்கைகள் – வரும், 2026 பெப்ரவரி மற்றும், 2027 பெப்ரவரி அமர்வுகளில், சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆணை நீக்கப்பட்டிருக்கிறது.
தனியே 63 வதுஅமர்வில் (2026 செப்ரெம்பர்) எழுத்துமூல அறிக்கையையும், 2027 செப்ரெம்பரில், 66 வது அமர்வில், விரிவான எழுத்து மூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு மட்டும் கூறப்பட்டிருக்கிறது.
இது, வருடத்தில் இரண்டு முறை ஜெனிவாவில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து சிறிலங்காவை விடுவித்து ஆண்டுக்கு ஒரு முறையாக சுருக்கியிருக்கிறது.
இன்னும் ஒரு வருடத்திற்கு சிறிலங்காஅரசாங்கம் ஜெனிவாவை பற்றிய கவலை இன்றி இருக்கலாம். அதற்குப் பின்னரே இந்த விவகாரம் குறித்த கேள்விகள் அங்கு எழுப்பப்படும்.
அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து இறுதி அறிக்கை முன்வைக்கப்படும் போது பதிலளித்தால் சரி.
ஆக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த இரண்டாவது திருத்தப்பட்ட வரைவு, அதிகளவிலான வெளியையும் காலஅவகாசத்தையும் அளிப்பதாக இருக்கிறது.
இது பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்.
ஏனென்றால் ஜெனிவாவின் அழுத்தங்களில் இருந்து விடுபடுகின்ற சூழலை, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்காகவோ நீதிக்காகவோ பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளியும் கிடையாது.
-சுபத்ரா
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (28.09.2025)