49 வது இடத்தில் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்பு 49 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நடவடிக்கைகள் சரியான திசையில் இருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெறப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய கோப்பை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, கோப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டு, தேவையான நடவடிக்கைக்காக சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள 69 வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அவற்றில் அமைச்சர் ஜெயக்கொடியின் கோப்பு 49 ஆவது இலக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 25 வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.
8 மில்லியன் ரூபா முறைகேடு செய்ததாக அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இரண்டு பேருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.