“அனுர வெளிப்படுத்திய சொத்துக்கள் முழுமையானதல்ல“- கம்மன்பில
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு முழுமையானதல்ல என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில், இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு, முக்கிய அரசியல் தலைவர்கள் சமர்ப்பித்திருந்த சொத்துக்கள், பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, 275 மில்லியன் ரூபா சொத்துக்களை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே, இந்த சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு முழுமையானதல்ல என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024 செப்ரெம்பரில் நடைபெற்ற கடைசி அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, பிரித்தானியா , இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்ட செலவுகளின் விவரத்தை அதிபர் அனுரகுமார திசாநாயக்க வழங்கியிருக்க வேண்டும்.
கடந்த மே மாதம் வியட்நாமில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் கொழும்பு திரும்பியது தொடர்பாகவும் அதிபர் அனுரகுமார, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர்கள், நிதி தொடர்பாக வெவ்வேறு விளக்கங்களை வழங்கியதால், ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுப்பதற்கான நிதியை வழங்கியவர் யார் என்பதை சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.