மேலும்

சிறிலங்காவில் முதல்முறையாக சிக்கிய பெருந்தொகை போதைப்பொருள்கள்

சிறிலங்கா மண்ணில் இதுவரையில்லாதளவுக்கு பெருந்தொகை போதைப்பொருட்கள் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

தங்காலையில் நேற்று கைப்பற்றப்பட்ட மூன்று பாரஊர்திகளில் இருந்து சுமார் 635 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப் பொருட்களைக் கைப்பற்றியதாகவும், ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

சிறிலங்கா வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோன்று பெருந்தொகையான-  600 கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களும்,  கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி-56 துப்பாக்கியும், காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் நேற்று தங்காலையில் உள்ள சீனிமோதறவில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

சடலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு நபர் விசம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சிறிலங்கா காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்ட போது, தங்காலையில் உள்ள வீட்டில் இருந்த மற்ற நபர்களுடன் தனது தந்தை மது அருந்தியதாக மருத்துவமனையில் இறந்த நபரின் குழந்தை வெளிப்படுத்தியது.

சடலங்கள் தொடர்பான விசாரணையின் போது, ​​வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய ஊர்தியில் 10 கிலோ ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

பினி்னர் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாரஊர்தியில் இருந்து 200 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

அதன்பின்னர், மூன்றாவது பாரஊர்தியில் தர்பூசணி பழங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தங்காலை, தங்காலை – கதிர்காமம் வீதியில் உள்ள கோடல்லவத்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அதில் இருந்து  200 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயினைக் கைப்பற்றினர்.

பாரஊர்தியுடன் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனிமோதரையில் உள்ள வீட்டில் சடலங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று பாரஊர்திகளில் இருந்தும், 380 கிலோ ஐஸ், 245 கிலோ ஹெரோயின் என, மொத்தம் 635 கிலோ போதைப் பொருள்களும், ஆறு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தென்னிலங்கை அரசியல்வாதிகள், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருந்தும், புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்தும் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

எனினும் விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *