ஜப்பானின் 500 மில்லியன் யென் கொடையை ஏற்றுக் கொள்கிறது சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படை தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கு, ஜப்பானிடம் இருந்து 500 மில்லியன் யென் (சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) கொடையைப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு சேவைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானிடமிருந்து இந்தக் கொடையைப் பெறுவதற்கான முன்மொழிவுக்கு, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ், சிறிலங்கா கடற்படைக்கு ட்ரோன்களை வழங்க 500 மில்லியன் ஜப்பானிய யென் நிதி பயன்படுத்தப்படும்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்த கொடை தொடர்பான, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடப்படும்.
அதேவேளை, சிறிலங்காவின் கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான், 463 மில்லியன் யென் கொடையையும் வழங்கவுள்ளது.