ஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த அறிக்கை மீது விவாதம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளைய அமர்வின் போது சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது.
இந்த விவாதத்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
அவர் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும் அனைத்துலக தலையீட்டை நிராகரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலீடு செய்யும் வகையில், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இந்த மாதம் அரசிதழில் வெளியிடப்படும் என்றும், சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வாக்குறுதிகளை கொடுக்கவுள்ளார்.