அடுத்த மாதத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து
பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து வடக்கு, கிழக்கு, மலையகத்தில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் போது, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும்.
அதிகாரத்திற்கு வந்த சிறிது காலத்திற்குள், பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக அரச சட்டவாளர் வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்னவின் கீழ் அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது.
இந்தக் குழு பலமுறை கூடி, ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய சட்டத்தின் மூலம் அது பதிலீடு செய்யப்படும்.
தேசிய மக்கள் சக்தி கொள்கை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறே இது முன்னெடுக்கப்படுகிறதே தவிர, எந்தவொரு வெளிப்புற அழுத்தங்களாலும் அல்ல என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
