பிணை மனு நிராகரிப்பு – ரணிலை சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லண்டனுக்குப் பயம் மேற்கொண்டதன் மூலம், 16.6 மில்லியன் ரூபா இழப்பை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.
இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட, ரணில் விக்ரமசிங்கவை, கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது – அவரைப் பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் திலீப பீரிஸ் அதனை கடுமையாக எதிர்த்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற விசாரணை இடைநிறுத்தப்பட்டதுடன், மீண்டும் விசாரணை தொடங்கவிருந்த போது மின்வெட்டு ஏற்பட்டது.
அதன் பின்னர் பிணைமனு கோரிக்கை மீது கடுமையான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் அவரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நிலுப்புலி லங்காபுர சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்காவின் வரலாற்றில் சிறைக்குச் செல்லும் முதலாவது முன்னாள் அதிபராக ரணில் விக்கிரமசிங்க இடம்பெற்றுள்ளார்.
