தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக தயா லங்காபுர முன்மொழிவு
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீண்டநாட்களாக வெற்றிடமாக இருந்து வருகின்ற நிலையில், அந்த ஆணைக்குழுவை அரசாங்கம் பலவீனப்படுத்த முனைதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்த பின்னர், தயா லங்காபுர, சிறிலங்கா அதிபரினால், தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார்.
1965ஆம் ஆண்டு அத்த நாளிதழில் ஊடகவியலாளராக பணியாற்றத் தொடங்கிய தயா லங்காபுர, 60 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்டிருப்பவர்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான அவர், திவயின, சிலுமின, தினமின, ரிவிர, லக்பிம போன்ற சிங்கள நாளிதழ் மற்றும் வாரஇதழ்களிலும், பிபிசி சிங்கள சேவையான, சந்தேசயவின் செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.