காவல்துறை மா அதிபரை பதவி நீக்க சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்
காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து, தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற விசாரணைக்குழு தேசபந்து தென்னகோனை குற்றவாளியாக கண்டதை அடுத்து அவரை் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் முன்மொழியப்பட்ட இந்தப் பிரேரணை மீது இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம், பிற்பகல் 4 மணி வரை விவாதம் நடத்தப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 177 உறுப்பினர்கள், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மட்டும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம், தேசபந்து தென்னக்கோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.