சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வந்தார் சோமரத்ன ராஜபக்ச
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, சிறைச்சாலையில் இருந்து கொண்டு, தனது மனைவி மூலம், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த தனது கணவன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், போர்க்குற்றங்கள், படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரிகளின் விபரங்களையும் அவர் வெளிப்படுத்துவார் என்றும் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.