யாழ். நீதிமன்றில் முன்னிலையாக கோட்டா தொடர்ந்து மறுப்பு
ஜேவிபி செயற்பாட்டாளர்கள் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறார்.
2011 ஆம் ஆண்டு காணாமல்போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதிமொழியை அவர் நேற்று தனது சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, மூலம் உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாவதற்கு தனக்குப் பாதுகாப்பில்லை என கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்தார்.
இதனால் இந்த வழக்கு இழுபறிக்குள்ளாகி வந்த நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதியரசர்கள் யசந்த கோதாகொடா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வின் முன் விசாரணக்கு வந்தது.
இதன்போது கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் முன்னிலையான, சட்டவாளர், ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் வலியுறுத்தினார்.
இதனால் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்று கூறினார்.
அதற்கு பதிலாக, கொழும்பில் உள்ள நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அவர் தயாராக இருக்கிறார் என்றும், வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் நீதிவான் முன் தேவையான சமர்ப்பணங்களைச் செய்து, நான்கு வார காலத்திற்குள் பொருத்தமான உத்தரவுகளைப் பெறுமாறு கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவுக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்சவின் சம்மதம் தெரிவித்துள்ளதால், மேல்முறையீட்டை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சட்டவாளர் ரொமேஷ் டி சில்வா கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர்களின் சட்டவாளர் நுவான் போபகே அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், உயர்திமன்றம் விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பின்னணி
ஜேவிபி செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தனர்.
இதுதொடர்பாக யாழ். நீதிமன்றத்தில் உறவினர்களால் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலையாவதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, அதற்கு மறுத்து வந்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து, அழைப்பாணையை ரத்து செய்தது.
இதையடுடுத்து, காணாமல் போன செயற்பாட்டாளர்களின் குடும்பங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான உத்தரவை மீண்டும் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.