மேலும்

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்த போதிலும், கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முந்தைய ஆட்சிகளின் போது, ஷானி அபேசேகர மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சேவையிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்குத் தகுதியான பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை. அவர் தனது வேலையை இழந்தார்.

அவரது தொழில் மற்றும் எதிர்காலம் பாழடைந்தன. அவருக்கு செய்யப்பட்ட அநீதி இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது, அனுர குமார திசாநாயக்கவும் அவருக்கு ஆதரவாகப் பேசினார், நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நியமனங்கள் சரியான நடைமுறைகள் மூலம் செய்யப்பட்டன.

யாராவது சரியானதைச் செய்யச் சொல்லும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது இதை எதிர்ப்பவர்கள் பாசாங்குத்தனமாக இருக்கிறார்கள்.

வங்கரோத்தான  அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தான் இந்த நியமனங்களை எதிர்க்கிறார்கள் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியதன் அடிப்படையில் தான், ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியிருந்தார்.

எனினும், பேராயர் அவ்வாறு யாரையும் குறிப்பிட்டு நியமிக்குமாறு கூறவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை மறுத்திருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *