அதானிக்கு 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்மட்ட வட்டாரங்கள் மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன், விலை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து, தனது முதலீட்டுத் திட்டங்களிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இதனால், திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு அந்த நிறுவனம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமத்தினால், கடந்த மே மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இந்திய நிறுவனம் கோரியபடி பணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து, சிறிலங்காவின் நிலையான எரிசக்தி அதிகாரசபை சட்ட ஆலோசனை கோரியது.
இதற்கமைய, சில செலவுகளுக்கான தொகையை திருப்பிச் செலுத்துவது தொடர்பான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாகவும், இவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த தொகை 300 முதல் 500 மில்லியன் ரூபா வரை இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிசக்தி அனுமதிப்பத்திரத்திற்காக அதானி செலுத்திய பணம், எதுவாக இருந்தாலும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதில்லை என்பதில் அதிகாரசபை உறுதியாக உள்ளது.
இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், திருப்பிச் செலுத்த வேண்டிய சரியான தொகை தீர்மானிக்கப்படும்.
வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் நிலையத் திட்டங்களில் அதானி நிறுவனம் 442 மில்லியன் டொலர் முதலீடு செய்யவிருந்தமை குறிப்பிடத்தக்கது.