தையிட்டி விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானத்துக்கு முயற்சி
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைப் பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானப் பணிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்று மாலை முடிவுற்ற பின்னர், தவிசாளர் சுகிர்தன் தலைமையிலான சபை உறுப்பினர்கள் சட்டவிரோத திஸ்ஸ விகாரைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதன்போதே, அங்கு அடாத்தாக அபகரிக்கப்பட்டுள்ள தனியார் காணியில் புதிதாக கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக அத்திவார குழி வெட்டப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விகாராதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கு சபையின் அனுமதி பெறப்படவில்லை என்றும், தமது கடிதத்திற்கு பதிலளிக்காவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை வலி.வடக்கு பிரதேச சபையின் நேற்றைய அமர்வில், தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பான சபை சட்டநடவடிக்கையை எடுப்பதென, ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
இந்த சட்ட நடவடிக்கை சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மூலம் முன்னெடுக்கப்படும் என்று தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

