மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு
மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் இன்னமும் மெதுவாகவே நடந்து கொண்டிருப்பதாக, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
அத்துடன், மகிந்த குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தி, அரசாங்கம் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சிலரும் வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான விசாரணைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.