மேலும்

அவைத் தலைவர் விவகாரம் வெடிக்காது – இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவு

sivajilingamவடக்கு மாகாண அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சபையை சுமுகமான முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்களின் பங்கேற்புடன் சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு மாகாணசபையை எஞ்சிய 15 மாதங்களும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், கொண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், அவைத் தலைவர் விவகாரத்தையோ, பிரதி அவைத் தலைவர் விவகாரத்தையோ, பிரச்சினையாக்குவது அர்த்தமற்றது.

நடந்து முடிந்த விடயங்களை மீண்டும் கிளறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில், அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்.

வரும் 22ஆம் நாள் வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக, நாளை காலை, அவை நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும்.

அதேவேளை, நாளை பிற்பகல் அமைச்சர்கள் வாரியக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. விசாரணைக் குழுவினாரல் குற்றம்சாட்டப்படாத அமைச்சர்கள் இருவரும் நாளை தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பர்.

அதேவேளை, விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் பதவி விலகலை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். கல்வி அமைச்சர் குருகுலராசா இன்னமும் தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கவில்லை. அவர் இன்று மாலை அதனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒருவருடைய அமைச்சுப் பொறுப்புக்களையாவது, தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். ஆளுனருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டு, இன்றிரவு அல்லது நாளை பதவியேற்பு இடம்பெறும்.

தொடர்ந்து அவை அமர்வுகளையும், சபையின் செயற்பாடுகளையும் சுமுகமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்” என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *