ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுடன் ஐதேக இரகசிய ஆலோசனை
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, எதிரணியின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஓய்வுபெற்ற இரண்டு மேஜர் ஜெனரல்கள், மற்றும் பிரிகேடியர், கேணல் நிலையில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளது.
அதிபர் தேர்தல் நாளன்று, கட்சி ஆதரவாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்
எதிரணியின் ஆதரவாளர்கள், ஆளும்கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
ஐதேக ஆட்சிக்காலத்தில் ஜோன் அமரதுங்க, உள்நாட்டு விவகார அமைச்சராகவும், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.