மேலும்

சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச maithripalaஅரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

இவ்வாறு World Socialist Web Site இணையத்தில் K. Ratnayake எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஏறத்தாழ 36 வரையான அரசியற் கட்சிகள் மற்றும் குழுக்கள் திங்களன்று சிறிலங்காவின் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். சிறிசேன நாட்டில் நிலவும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வாக்களர்களுக்கு வழங்குவதை நோக்காகக் கொண்டே தற்போது கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

“ஜனநாயகம் மற்றும் மக்களுடன் நட்பைப் பாராட்டும் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான மக்களின் பொதுவான நிகழ்ச்சி நிரல்” என்பதை அடிப்படையாகக் கொண்ட எதிரணியானது, அனைத்துலக நாணய நிதியத்தால் இனங்காணப்பட்ட அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரக்கமற்ற கடும்போக்கான பொருளாதார அளவீடுகளைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தும். அதேவேளையில், சிறிலங்காவின் எதிரணியானது அமெரிக்காவுடனும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆசியாவுக்கான செயற்பாடுகளுடனும் இணைந்து பணியாற்றும்.

வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசிக் கட்சி மற்றும் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட எதிரணியின் பொதுவேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்க எதிரணியை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததுடன் மைத்திரிபால சிறிசேனவுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்கவால் முன்னெடுக்கப்பட்ட அரசியற் சதித்திட்டத்தின் விளைவாக அதுவரை காலமும் சிறிலங்கா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராகச் செயற்பட்ட சிறிசேன நவம்பர் 21 அன்று சில அமைச்சர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ராஜபக்சவின் சீனாவுடனான நெருக்கமான உறவை எதிர்த்து நிற்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்காவின் அரசியலில் இவ்வாறான ஒரு மாற்றம் இடம்பெறவுள்ளது என்பது நன்கு தெரியும். இந்நிலையில் சிறிலங்காவைப் புதியதோர் அதிபர் ஆட்சிசெய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவும் விரும்புவதால் இந்த அரசியற் சதித்திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

சிறிலங்காவில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபத்தைப் பயன்படுத்தி, ‘நாட்டில் சீர்குலைந்துள்ள சட்ட ஆட்சி’, ‘ஜனநாயக உரிமை மீறல்கள்’, ‘முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது விரிவடைந்துள்ள சமூக ஏற்றத்தாழ்வுகள்’, ‘பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கிடையில்  நிலவும் பேதங்கள் மற்றும் நாட்டில் அதிகரித்துள்ள அமைதியின்மை மற்றும் அவநம்பிக்கை’ போன்ற பல்வேறு விடயங்களை முடிவுக்குக் கொண்டுவருவதே தமது நோக்கமாகும் என எதிரணி தனது புரிந்துணர்வு உடன்படிக்கையின் போது பிரகடனப்படுத்தியுள்ளது.

பரந்தளவு அதிகாரங்களை வழங்கும் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதுடன், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவியேற்பதற்கு அனுமதிக்கும் 18வது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படும் என எதிரணி வாக்குறுதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் சிறிலங்காவை ஆட்சி செய்யும் அதிபர் இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்கலாம் என வரையறுக்கப்பட்டிருந்தது.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் மேலும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக பொது மற்றும் தனியார் துறைப் பணியாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரித்தல், அனைத்துப் பொருளாதாரத் துறைகளையும் பலப்படுத்துதல், ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கான குறிப்பாக பெண்கள், சிறார்கள், வயது முதிர்ந்தோர், ஓய்வுபெற்றோர், மாற்றுவலுவுள்ளோர் போன்றவர்களுக்கான வினைத்திறனான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கி அதன்மூலம் நலன்புரி நாடொன்றை மீளக்கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் சிறிலங்காவின் எதிரணியால் கூட்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கமானது நாகரீகமான அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், குறிப்பாக எப்போதுமில்லாதவாறு கடன் சுமையால் தத்தளிக்கும் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிரணியின் கூட்டுப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை. சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன்று தொழிலாளர் சமூகத்திற்கு எதிராக பல்வேறு மீறல்களைப் புரிந்துள்ளது. ஐ.தே.க 1970களின்  பிற்பகுதியில் சந்தை-சார்புக் கட்டமைப்பு நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தியதுடன், தமிழர் இனவாதத்திற்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிப்பதற்குமான உள்நாட்டுப் போரை ஆரம்பித்தது. ராஜபக்ச அரசாங்கத்தை விட தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது எதிரணியே மிகவும் மோசமான ஈவிரக்கமற்ற தாக்குதல்களை மேற்கொள்ளும்.

‘நலன்புரி அரசை மீளவும் கட்டியெழுப்புவேன்’ என சிறிசேன வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் இவர் தனது பொருளாதாரக் கோட்பாடுகள் தொடர்பாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. ‘நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது திறந்த பொருளாதாரக் கோட்பாட்டைப் பின்பற்றுவோம்’ என நவம்பர் 29 அன்று ஐ.தே.க தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிசேன உறுதியளித்தார்.

சிறிசேனவின் இந்த அறிவிப்பானது இவர் அதிபராகப் பதவியேற்றால் தொடர்ந்தும் பாரிய வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் அதேவேளையில் சிறிலங்கா வாழ் தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மோசமாகும் என்பதற்கான உத்தரவாதமாகவே இது நோக்கப்படுகிறது. நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை அனைத்துலகப் பொருளாதாரம் மேலும் நலிவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை சிறிலங்காவின் ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இவ்வாறான நிகழ்ச்சி நிரல் பின்பற்றப்படுகிறது.

ராஜபக்ச அரசாங்கத்திற்கும் எதிரணிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாத ஒன்றாக வெளியுறவுக் கோட்பாடு காணப்படுகின்ற போதிலும் இது தொடர்பாக சிறிலங்காவின் எதிரணியால் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராஜபக்சவால் பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கினாலும் கூட, போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு பொறுப்பளிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன்மூலம் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

சீனாவுடன் சிறிலங்கா நெருங்கிய நட்பைப் பேணுவதானது பொருளாதாரத் தடை ஏற்படவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சிறிலங்கா தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை விதிக்கப்படலாம் என எதிரணிக்குத் தாவிய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அச்சப்படுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிராக இவ்வாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போன்றன தொடர்பாக சிறிசேனவிடம் பத்திரிகையாளர்கள் வினவியபோது, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தனது அரசாங்கம் நிறைவேற்றும் என சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் போர்க் குற்றங்களை மூடிமறைக்கவும், அனைத்துலக விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ராஜபக்ச கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கினார்.

தான் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவேன் எனக் கூறியதன் மூலம், நாட்டிலுள்ள தமிழ்த் தலைவர்களுக்கான கோரிக்கை போன்றவற்றுடன் கூடிய அமெரிக்காவை நோக்கிய வெளியுறவுக் கோட்பாட்டையே சிறிசேன உருவாக்க விரும்புகிறார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசியல் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான ‘அரசியற் தீர்வு’ எட்டப்பட வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளையில், அண்மையில் ராஜபக்சவின் கூட்டணியிலிருந்து விலகிக் கொண்ட, சிங்கள-பௌத்த தீவிரவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் சிறிசேன பிறிதொரு புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் பௌத்தத்தை முன்னுரிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும், சுயாட்சி அரசாங்க முறைமையை எதிர்ப்பதாகவும் சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். அதாவது தமிழ்த் தலைவர்களுடன் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் வழங்குவதில் சிறிசேன ஆர்வங்கொள்ளவில்லை என்பதையே இது சுட்டிநிற்கிறது. ஜாதிக ஹெல போன்ற தீவிரவாத சிங்கள-பௌத்த கட்சியுடன் கூட்டுச்சேர்வதன் மூலம், பல்வேறு இன மற்றும் மதங்களுக்கிடையில் சிறிலங்காவில் தற்போது தீவிரமாகியுள்ள வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் சிறிசேனவுக்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ ஆட்சி செய்யும் என எதிரணியின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ராஜபக்சவின் கூட்டணியிலுள்ள கட்சிகளும் அனைத்துக் கட்சி என்பதற்குள் உள்ளடங்கும். அனைத்துக் கட்சி ஆட்சி என்பது சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்பதையே சுட்டிநிற்கிறது. தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளையோர் மீதான புதிய கடும்போக்கான பொருளாதார சுமையானது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூகக் குழப்பங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்கின்ற அச்சம் ஆளும் தரப்பிற்குள் நிலவுகிறது. ‘தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம்’ என்பது தொழிலாளர் வர்க்கத்திலிருந்து எழும் எந்தவொரு எதிர்ப்புக்களையும் அடக்குவதற்கேற்ப கொழும்பு அரசியல் முறைமையை மாற்றியமைத்தல் எனப் பொருள்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *