மேலும்

டோவலின் வெளிவராத கொழும்பு சந்திப்பு இரகசியங்கள் – ஆங்கில வாரஇதழ்

ajit-dhoval-galle-dialouge (2)சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து, இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

“இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் கடந்தவாரம், ‘காலி கலந்துரையாடல் -2014’இல் பங்கேற்பதற்காக, கொழும்பு வந்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்திப்பதற்கு டோவல் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

அவரது பயணத்தை அதிபர் தேர்தலில் மறைமுகத் தலையீடாக அமையுமா என்று அரசியல் வட்டாரங்களில் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது.

டோவல் முதலில் சந்திரிகாவை சந்தித்து பேசினார்.

அவருடனான 15 நிமிட தனிப்பட்ட பேச்சுக்களை அடுத்து, மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தினார்.

பின்னர், ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும், கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் சந்தித்துப் பேசினார்.

ரணிலுடன் அவர் பேசியபோது மலிக் சமரவிக்கிரம மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், மலிக்கும், மங்களவும் விலகிச் சென்ற பின்னர், ரணிலுடன் டோவல் தனியாக பேச்சு நடத்தினார்.

அதையடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் டோவல்.

கொழும்பில் அஜித் டோவல் தலைவர்களுடன் தனித்தனியாக நடத்திய பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் இரகசியமாகவே உள்ளன.

டோவல் புறப்பட்டுச் சென்று இரண்டு நாட்கள் கழித்து, இந்திய அரசாங்கம் தெற்காசியாவின் கடல் பாதுகாப்புக் குறித்து இந்தியா கவலை கொள்வதாகவும், சிறிலங்காவைச் சுற்றிய கடற்பகுதியின் நடமாட்டங்கள் தொடர்பான உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும் இந்தியக் கடற்படைத் தளபதி, தெரிவித்திருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் இந்தியாவுக்குப் பெரும் கவலையை அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து,  இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக, தெரிகிறது.

மேலதிகமாக, தேர்தல் காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துகிறது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *