மேலும்

சிறிலங்காவைப் புறக்கணித்தது இந்தியா – வெளிவிவகார அமைச்சு கவலை

India-srilanka-Flagஇந்திய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தள நுழைவிசைவு திட்டத்தில் சிறிலங்கா உள்ளடக்கப்படாதது குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முதல், 43 நாடுகளின் குடிமக்களுக்கு இணையத்தள நுழைவிசைவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

62 டொலர் கட்டணத்தைச் செலுத்தி, 30 நாட்களுக்கான இந்த நுழைவிசைவை இணையத்தளம் மூலம் பெறமுடியும்.

இந்தியாவின் சென்னை உள்ளிட்ட 9 விமான நிலையங்களின் ஊடாக இந்த நுழைவிசைவுடன் இந்தியாவுக்குள் நுழைய முடியும்.

இதில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான், இஸ்ரேல், ஜேர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட 43 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், பாகிஸ்தான்  உள்ளிட்ட 8 நாடுகளின் குடிமக்களுக்கு இந்த நுழைவிசைவு வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படாது என்று இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தநிலையில், சிறிலங்காவை இந்த இணையத்தள நுழைவிசைவு திட்டத்தில் உள்ளடக்கப்படாதது குறித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள இந்த நுழைவிசைவு வழங்கப்பட்டால் பௌத்த ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

இந்தியா இந்த திட்டத்தில் சிறிலங்காவைப் புறக்கணித்திருந்தாலும், இந்தியர்களுக்கு சிறிலங்கா தொடர்ந்தும், வருகை நுழைவிசைவை வழங்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *