மேலும்

இந்தியச் சந்தையை முறியடிக்க சீனா கால்வைக்க வேண்டிய இடம் சிறிலங்கா

india-chinaசிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட துறைமுகத் திட்டத்தை மீளவும் புதுப்பிப்பதற்கு உதவி கோரியுள்ளதானது, இந்நாட்டின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சீனா அதிகளவு செல்வாக்குச் செலுத்தியதற்கான ஒரு குறியீடாகக் காணப்படுகிறது.

கப்பல்கள் எதுவுமற்ற ஒரு துறைமுகமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் காணப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

துறைமுகம் அமைக்கப்பட வேண்டிய தேவை எழாத இடமான அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றைக் கட்டுவதற்காக முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் பாரியளவிலான நிதியை முதலீடு செய்ததானது தவறு எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான பயனற்ற திட்டங்களைச் செயற்படுத்தி ராஜபக்ச தனது செல்வாக்கை அதிகரித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட புதிய அரசாங்கமானது, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ‘கப்பல் கட்டுமானப் பகுதியாக’ மாற்றுவதெனவும் அதன் பின்னரே, இதில் கப்பல்கள் தரித்து நிற்பதற்கான வசதியை உருவாக்குவதா அல்லது இல்லையா என்பது தொடர்பாகவும் ஆராய்வதெனவும் தீர்மானித்தது.

‘இத்திட்டத்திற்காக நாங்கள் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளோம். ஆனால் இதிலிருந்து நாங்கள் எவ்வித வருமானத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. இத்துறைமுகத்தை பயன்பாடு மிக்கதாக உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

ஆகவே சீன முதலீட்டாளர்கள் இத்துறைமுகத்தை கப்பல் கட்டும் தளமாக மாற்றுவதற்கு முன்வரவேண்டும். அத்துடன் இங்கு  கைத்தொழிற்பூங்கா ஒன்றையும் நிறுவுவதற்கான முதலீட்டை முதலீடு செய்யவும் சீனர்கள் முன்வரவேண்டும்’ என சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான, பொருளாதார இராஜதந்திர நகர்வாக ஹார்ச டீ சில்வா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளதாக சிறிலங்காவின் முன்னணி பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

‘சீனாவானது இத்திட்டத்தை தொடர்வதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான பிரச்சினை முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என நம்பப்படுகிறது’ என டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கப்பல் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூற்று ஆய்வை மேற்கொள்வது தொடர்பில் சீனத் துறைமுக பொறியியல் நிறுவனத்தால் வரையப்பட்ட திட்டத்தை சிறிலங்காவின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இக்கப்பல் தரிப்பிடத்தை முகாமை செய்வதுடன் அதனைச் செயற்படுத்துவதற்குமான திட்ட வரைபை சீன நிறுவனமானது சிறிலங்காவின் அமைச்சரவையில் கையளித்துள்ளது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய கட்டுமானத் திட்டங்களில் அம்பாந்தோட்டையும் ஒன்றாகும்.

கடந்த ஆறு  ஆண்டுகளில் உதவி, இலகு கடன்கள், மானியங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் சிறிலங்காவானது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் இருந்து பெற்றுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு கட்டுமானத் திட்டங்களின் 70 சதவீதம் சீனாவாலும் சீன நிறுவனங்களாலும் நிதி வழங்கப்பட்டவையாகும்.

2010ல் சீனாவால் கடனாக வழங்கப்பட்ட 316 மில்லியன் அமெரிக்க டொலர்களின் மூலம் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு, 2011ல் ஆறு கப்பல்களும் 2013ல் 18 கப்பல்களும் மாத்திரமே வந்துள்ளன.

இதன்பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஊக்குவிப்பில் கப்பல் போக்குவரத்துக்கள் பகுதியளவில் இடம்பெற்றன.

ஆனால் சிங்கப்பூருக்கு போட்டியாக  ஆரம்பிக்கப்பட்டஅம்பாந்தோட்டைத் துறைமுகமானது தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நட்டத்தையே ஏற்படுத்துகிறது.

இதனால் இத்துறைமுகத்தில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.

தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்சவிற்கு எதிரான சக்திகளும் சீனாவின் நிதியுதவியை எதிர்பார்த்து நிற்கின்றன. ஆனால் இவர்கள் வேறுவழியில் இதனை எதிர்பார்க்கின்றனர்.

‘சீனாவானது உலகம் பூராவும் நிதியை முதலீடு செய்யும் மிகப் பாரிய நாடாகும். இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் நாங்கள் சீனாவின் நிதியை எமது நாட்டில் முதலீடு செய்யுமாறே கேட்கிறோம்.

இதனை கடனாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சீனாவிடமிருந்து நாங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடனானது எமது அரசாங்கத்திற்குப் பெரும் சுமையாக உள்ளது.

நாம் வரி மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல் கடனை அடைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது’ என டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனத் துறைமுக பொறியியல் நிறுவனத்தாலும் Sinohydro என்கின்ற சீன நிறுவனத்தாலும் அமுல்படுத்தப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தின் முதற்கட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 361 மில்லியன் டொலர்களின் 85 சதவீதமானவை சீன எக்சிம் வங்கியால் வழங்கப்பட்டது.

இத்துறைமுகத்திற்காகப் பெறப்பட்ட கடனிற்கான ஆண்டு வட்டியாக 2012ல் 16.5 மில்லியன் டொலரும், 2013ல் 18.5 மில்லியன் டொலரும் கடந்த ஆண்டு 16.7 மில்லியன் டொலரும் செலுத்தப்பட்டுள்ளது.

இத்துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டமாக ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து 808 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டன. இந்நிதியானது சீன அரசாலும், சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் மற்றும் சீன வர்த்தக நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டன.

இந்திய உபகண்டத்திற்கு ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் சிறிலங்காவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள 45 சிறப்பு ஏற்றுமதி பொருளாதார வலயங்களைச் செயற்படுத்துவதற்கு சீனா தனது முதலீட்டை மேற்கொள்ள முன்வரவேண்டும் எனவும் சிறிலங்காவின் பிரதி வெளியுறவு அமைச்சர் டீ சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவ அமைவிடமானது இந்தியச் சந்தையில் சிறிலங்கா காலூன்றுவதற்கு துணையாக உள்ளது. கொழும்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் கப்பல் ஏற்றுமதிகளில் 70 சதவீதமானவை இந்தியாவுடன் தொடர்புபட்டதாகும்.

இந்தச் சந்தையை சீனா முறியடிக்க விரும்பினால் தனது முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய இடம் சிறிலங்கா ஆகும்’ எனவும் டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

வழிமூலம் – South China Morning Post
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *