மேலும்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

யாழ்ப்பாணம்- தீவகம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி,சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றம்  இன்று தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த வழக்கு இன்று  ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பிரதிவாதிகள் சார்பில் சட்டவாளர் க. சுகாஸ் மற்றும் ஊர்காவற்றுறை சட்டவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சட்டவாளர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமையை எந்தவொரு சட்டமும் தடை செய்ய முடியாது என்றும், சிறிலங்கா அரசியலமைப்பு மற்றும் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதிவாதிகள் தரப்பில் வாதிடப்பட்டதாக சட்டவாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் அல்லது இலட்சினைகளைப் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது சட்டவிரோதமானதல்ல என நீதிமன்றத்தின் கட்டளையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராகக் கோரப்பட்ட தடை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சட்டவாளர் க. சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *