சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி
இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதி , அவர் மே 21 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
அவர் நேற்றுக்காலை பத்தரமுல்லாவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதையடுத்து, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் எதிரிசிங்கவைச் சந்தித்த இந்திய விமானப்படைத் தளபதி, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாக, இந்திய விமானப்படை தளபதி, எயர் சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், நேற்று பாதுகாப்பு அமைச்சில், சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை சந்தித்தார்.
இரு அதிகாரிகளும் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

