அரசியல் அழுத்தங்களாலேயே பதவி விலகினார் ஹர்ஷ அபேவிக்ரம
சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்தே, விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பதவி விலகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் தலைமை மதகுருவான வண. பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் சார்பாக விமான நிலையத்துக்குள் நுழைவதற்கான நிரந்தர அனுமதி வழங்கக் கோரி ஜனவரி 9ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், விமான நிலைய வளாகங்களுக்கு, குறிப்பாக தடைசெய்யப்பட்ட பகுதிகள் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கீழ் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்றும், கடமைகளைச் செய்யத் தேவையான விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே நிரந்தர விமான நிலைய அனுமதிச் சீட்டுகளுக்குத் தகுதியுடையவர்கள் என்றும், எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அதற்குப் பதிலளித்திருந்தார்.
வெளிநபர்களுக்கு அத்தகைய அனுமதிச் சீட்டுகள் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட நோக்கத்திற்காக நுழைவு தேவைப்பட்டால், கோரிக்கையை சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும், நுழைவதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும், நடைமுறைகளுக்கு ஏற்ப அதுகுறித்து பரிசீலிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துலக விமான நிலையங்கள், அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு பரிந்துரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏதேனும் மீறல்கள் அல்லது விலகல்கள் ஏற்பட்டால் விமான நிலையத்தின் தரத்தை குறைக்கும் என்றும், இது அனைத்துலக நம்பிக்கை, செயல்பாடுகள் மற்றும் இணைப்பைப் பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
அந்தக் கடிதங்கள், போக்குவரத்து துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் பிரதியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் அனுர கருணாதிலக, பௌத்த பிக்குவுக்கு அனுமதி வழங்குமாறு எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், அத்தகைய அனுமதியை வழங்குவது அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளை மீறும் செயல் என்றும், தேசிய பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும்,எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைச்சர் அனுர கருணாதிலக அதனை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்தே, எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதியான ஹர்ஷ அபேவிக்ரம, அரசியல் தலையீடுகளால் பதவி விலகியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
