கல்வி அமைச்சு முன் காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கிறார் விமல் வீரவன்ச
புதிய கல்வி சீர்திருத்தங்களை கைவிடக் கோரியும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை பதவி விலகக் கோரியும், காலவரையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளுக்காக பெரியவர்கள் நிற்கிறார்கள்” என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை காலை 9 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்பாக, தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று டத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட விமல் வீரவன்ச, அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள பெற்றோர் தொடர்ச்சியான இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குழந்தைகளுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் அறிமுகப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சீர்திருத்தங்கள், போதுமான ஆலோசனை இல்லாமல் அவசரமாக செயற்படுத்தப்படுவதாகவும், கல்வியை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சிக்கு பதிலாக ஒரு வணிக முயற்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி பாடத்தொகுதிகளில் இணையத்தள இணைப்புகள் மற்றும் வலையொளித் தளங்களைச் சேர்ப்பதன் மூலம், இதுபோன்ற தளங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்புவது குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் யார் நிதி ரீதியாக பயனடைகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
