28 பாகிஸ்தானியர்களும், 2 சீனர்களும் மன்னாரை விட்டு வெளியேறினர்
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தில் பணியாற்றிய 28 பாகிஸ்தானியர்களும் இரண்டு சீனர்களும், பணிகளை முடித்துக் கொண்டு, சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்த பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அவர்கள் நாட்டை விட்ட வெளியேறியுள்ளனர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், சீலெக்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள், சிறிலங்கா மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள், மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோல் அடங்கிய தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் கூட்டப்பட்டது.
இதன்போது, வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறி விட்டதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மூலம் அவர்களுக்கான பணி விசாக்கள் பெறப்பட்டதாகவும் மன்னார் அரச அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்ஸ்கேப் மன்னார் நிறுவனத்தில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்கள் சீலெக்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்துடன் நெருக்கமாக செயல்படும் பாகிஸ்தானின் ஓரியண்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
சிறிலங்காவில் தங்கியிருந்த காலத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனத் தொழிலாளர்கள் மன்னார் மாவட்ட மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள சவரக்காடு கிராமத்தில் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர்.
இரண்டு பாகிஸ்தானியர்கள் கடலுக்குள் நுழைந்ததாகவும், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்ட போதும், சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கடற்படைக்கு அத்தகைய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து வெளிநாட்டினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்து விட்டு சிறிலங்காவை விட்டு வெளியேறி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மன்னார் அரசாங்க அதிபர், கனகேஸ்வரன், தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் குடியேற்ற ஆவணங்களை ஆய்வு செய்ததாகவும், சிறிலங்கா அரசு அவர்களுக்கு செல்லுபடியாகும் பணி விசாக்களை வழங்கியதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டவர்கள் முறையான பணி விசாக்களுடன் சட்டப்பூர்வமாகப் பணியமர்த்தப்பட்டனர், அவர்கள் இப்போது காற்றாலை நிறுவலை முடித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் மன்னாள் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் இந்தியா சம்பந்தப்பட்ட பிராந்திய புவிசார் அரசியல் உணர்திறன் காரணமாக, குறிப்பாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் சிறிலங்காவின் வெளிநாட்டு ஈடுபாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்ட நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே மன்னாரில் வீட்டுவசதி மற்றும் குடிநீர் திட்டங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது, இந்தப் பகுதியில் பாகிஸ்தானியர்கள் இருப்பது புதிதல்ல என்று சிறிலங்கா மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
