ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?
ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர், அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.
ஜே.ஆரின் பிரதமர் ரணசிங்க பிரேமதாச, இந்தியாவுடன் குறிப்பாக அன்பான உறவைப் பேணாததால், அவர் இந்தியாவிற்குப் பயணம் செய்த போதிலும், அவரால் இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை.
இருப்பினும், ஐ.நா. பயணத்தின் போது, அவர் நியூயோர்க்கில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார்.
பிரேமதாச அதிபரான பின்னர், அவரது பிரதமர் டி.பி. விஜேதுங்கவிற்கும் அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.
1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கவோ அல்லது அவருக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்ட ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ இந்தியாவிற்கு அழைக்கப்படவில்லை.
இருப்பினும், 2002 ஆம் ஆண்டு முதல் முறையாக, ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது, இந்தியா அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்தது.
ஏனெனில், அப்போதைய அரசாங்கம், போட்டி கட்சிகளைச் சேர்ந்த இரண்டு தலைவர்களால் – அதிபர் சந்திரிகா மற்றும் பிரதமர் ரணில் – தனித்தனி அதிகார மையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
2005 இல் மகிந்த ராஜபக்ச அதிபரான பின்னர் அவரது பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம். ஜயரத்ன ஆகியோரும் இந்தியத் தலைவர்களுடனான அதிகாரபூர்வ வருகைகள் அல்லது சந்திப்புகளுக்கு இந்தியாவிற்கு அழைக்கப்படவில்லை.
2007 இல், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறியை இந்தியப் பிரதமரைச் சந்திக்க அனுப்பினார்.
இது விடுதலைப் புலிகளின் அமைதிப் பேச்சுக்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு.
2015 இல் மைத்திரிபால-ரணில் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என, அரசாங்கம் இரண்டு வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அதிகாரக் குழுக்களைக் கொண்டிருந்ததால், இந்தியா மீண்டும் ஒருமுறை பிரதமர் ரணிலை, ஒரு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளுமாறு அழைத்தது.
இதேபோல, 2019 இல் கோட்டாபய ராஜபக்ச அதிபரான பின்னர், இந்தியா அவரது பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஒரு அதிகாரபூர்வ பயணத்திற்கு அழைத்தது.
சகோதரர்களாக இருந்தபோதிலும், கோட்டாபயவும் மகிந்தவும் நிர்வாகத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பதை இந்தியா அங்கீகரித்தது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அதிபரான பின்னர், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு இந்தியா அழைப்பு விடுக்கவில்லை.
ஏனெனில், அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதிபரின் அதே அதிகார முகாமை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார்.
அண்மையில் அனுரகுமார திசாநாயக்க அதிபரான பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அதிகாரபூர்வமாக இந்தியா அழைக்கவில்லை.
இருப்பினும், புதுடெல்லியில் நடந்த NDTV உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஒரு அன்பான மற்றும் சிறப்பான வரவேற்பை வழங்கினார்.
இது சந்திரிகா மற்றும் மைத்திரிபால அதிபர்களாக இருந்த போது இந்தியப் பிரதமர் ரணிலை எவ்வாறு சந்தித்தார் என்பதை நினைவூட்டுகிறது.
அனுர மற்றும் ஜேவிபி அரசாங்கத்தின் கீழ் கணிசமான நிர்வாக அதிகாரம் இல்லாமல் ஹரிணி பிரதமராக பணியாற்றினாலும், இந்தியா அவரை ஒரு சுயாதீன அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதுகிறது என்பதை இது குறிக்கிறது.
இந்தியாவின் பதிலை ஜேவிபி எவ்வாறு விளங்குகிறது, அல்லது பிரதமர் ஹரிணி மோடியுடனான தனது விவாதங்களை ஜேவிபிக்கு எவ்வாறு விளக்குவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இங்கு சுவாரசியமான ஒரு விடயம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
ஹரிணி சீனாவிலும், இந்தியாவிலும் இருந்த போது, ஜேவிபியின் தீவிர நிலைப்பாடு கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவில் இருந்தார் என்பதே அது.

