வட, கிழக்கு தொடருந்து சேவைகள் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது
வடக்கு, கிழக்கில் இருந்து, தொடருந்து சேவைகள் மூலம் அரசாங்கம் கணிசமான வருவாயைப் பெறுவதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்வி அமர்வின் போது, வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொடருந்து துறைக்கு கிடைத்த மொத்த வருவாயில் 8% வடகிழக்கு தொடருந்து சேவை மூலம் பெறப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தொடருந்துகளில் உறங்கல் பெட்டிகளைச் சேர்க்க முடிவு செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண தொடருந்து நிலையங்களில் மொத்தம் 14 சிங்களவர்களும் 68 தமிழ் மொழி பேசும் அதிகாரிகளும் நிலையப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
அதே நேரத்தில் 52 சிங்களவர்களும் 64 தமிழ் மொழி அதிகாரிகளும் பிற தர அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர்.
வடக்கில் 23 முக்கிய தொடருந்து நிலையங்கள் உட்பட மொத்தம் 41 தொடருந்து நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 16 முக்கிய தொடருந்து நிலையங்கள் மற்றும் 13 துணை தொடருந்து நிலையங்கள், வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரை இயங்குகின்றன.
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை 7 முக்கிய தொடருந்து நிலையங்களும் 4 துணை தொடருந்து நிலையங்களும் உள்ளன.
அதே நேரத்தில் கிழக்கில் 18 முக்கிய தொடருந்து நிலையங்கள் உட்பட 14 தொடருந்து நிலையங்கள் இருக்கின்றன.
உறங்கல் பெட்டிகள் கொண்ட எந்த தொடருந்துகளும் இன்னும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய தொடருந்துகள் சேர்க்கப்பட்டதிலிருந்து, பழைய உறங்கல் பெட்டிகள் சேவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக நவீன குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த காரணத்தினால், புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகளில் உறங்கல் பெட்டிகள் இருக்கவில்லை.
பழைய முதல் வகுப்பு உறங்கல் பெட்டியில் 12 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும், ஆனால் புதிய குளிர்சாதன தொடருந்து பெட்டியில் 48 பயணிகள் பயணிக்க முடியும்.
உறங்கல் பெட்டிகள் சேர்க்கப்பட்டால், அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
அதனால் பெட்டிகளை இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அதற்கு பதிலாக, வசதியான இருக்கைகள் கொண்ட தொடருந்து பெட்டிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறோம்” என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
