சிறிலங்காவில் மீண்டும் அரசியல் படுகொலை
சிறிலங்காவின் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று சுட்டுக் கொன்றுள்ளார்.
அண்மைய மாதங்களில் சிறிலங்காவைப் பற்றிக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்ட முதல் அரசியல்வாதியாக அவர் திகழ்கிறார்.
கொழும்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தெற்கே உள்ள கடலோர நகரமான வெலிகம நகர சபையின் தலைவரான லசந்த விக்கிரமசேகர, அதிகாரபூர்வ பணியில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கிதாரி பணியக கட்டடத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை, மேலும் சந்தேக நபரை அடையாளம் காண விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த கொலை குற்றக் கும்பல்களுக்கிடையிலான போட்டியின் விளைவு என்றும், விக்கிரமசேகர கும்பல் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, கொல்லப்பட்ட விக்கிரமசேகர மீது ஆறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் முன்னர் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் கூறினார்.
விஜேபால எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் அல்லது நீதிமன்ற வழக்குகள் என்ன என்பதை குறிப்பிடவில்லை.
இருப்பினும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
விக்கிரமசேகரவுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியதற்காக, அரசாங்கத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டினார்.
எனவே இந்தக் கொலைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது ஒரு அரசியல் கொலை என்றும் அவர் கூறினார்.
38 வயதான விக்கிரமசேகர, ஆளும் கட்சியுடன் நகரசபையின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்காக, ஒரு முக்கியமான போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக, குற்றக் கும்பல் போட்டி காரணமாக, அண்மைய மாதங்களில் சிறிலங்காவின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், குற்றங்களின் அலை அதிகரித்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை சிறிலங்காவில் 100 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 56 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த புதிய வன்முறை எழுச்சியில் கொல்லப்பட்ட முதல் அரசியல்வாதியாக விக்ரமசேகர கருதப்படுகிறார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாக அமுல்படுத்தவும், குற்றக் கும்பல்களை ஒடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பல் தலைவர்களையும், பிரபல குற்றவாளிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றக் கும்பல் தலைவர்கள் என்று கூறப்படும் சிலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பதுங்கி உள்ளனர்.
சிறிலங்கா காவல்துறை, சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் இணைந்து, அந்த நாடுகளில் இருந்து சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பல் தலைவர்களைக் கைது செய்து, அண்மைய மாதங்களில் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
வழிமூலம்- ஏபி
