உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்
உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் நேற்று அனுசரணை நாடுகளின் சார்பில் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானத்தை முன்வைத்து பிரித்தானியாவின் ஐ.நாவிற்கான நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
கனடா, மலாவி, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, அனுசரணைக் குழுவின் சார்பாக, வரைவுத் தீர்மானம் L1 Rev1 ஐ பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்.
இந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது, துரதிர்ஷ்டவசமாக, காலமான மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு, நான் தொடங்குகிறேன்.
2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான அவரது மகன் ரஜீகர் தொடர்புடைய ஒரு அடையாள மனித உரிமைகள் வழக்கில் மருத்துவர் மனோகரன் நீதிக்காக அயராது வாதிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அவர் மேற்கொண்ட பிரசாரம் மற்றும் இந்த பேரவையில் அவர் பங்கேற்றது உட்பட, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கானமருத்துவர் மனோகரனின் அசைக்க முடியாத முயற்சி பலருக்கு உத்வேகம் அளித்தது.
அவரது மறைவு, பல குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்காமலோ அல்லது காணாமல் போனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இறந்து விட்டனர் என்பதை நினைவூட்டுகிறது.
மீதமுள்ளவர்களுக்கு – உயிர் பிழைத்தவர்கள், குடும்பங்கள், சமூகங்கள் – உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் அழைப்பு மேலும் மேலும் அவசரமாகிறது.
இந்த வரைவுத் தீர்மானம், நீண்டகால மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்ய தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாராட்டத்தக்க உறுதிமொழிகளையும், பல பத்தாண்டு கால இன மோதலால் ஏற்பட்ட ஆழமான காயங்களையும் ஒப்புக்கொள்கிறது.
இந்த உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
புதைகுழிகளை தோண்டி எடுப்பது, குடும்பங்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதில்களை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த விசாரணைகள் எதிர்கால அடையாள முயற்சிகளை ஆதரிப்பதையும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்யும் வகையில் நடத்தப்படுவது கட்டாயமாகும்.
ஒரு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவது, மோதல் கால மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைச் சுற்றி ஆழ வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிப்பை அகற்றுவதற்கான ஒரு முக்கிய படியைக் குறிக்கும்.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முக்கிய சட்டங்களை ரத்து செய்து சீர்திருத்துவது, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அணுகுமுறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை நிரூபிக்கும்;
மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அவசியம்.
இந்த முயற்சிகள் முன்னேறும் அதேவேளை, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பணியகம் தொழில்நுட்ப உதவி, அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான அதன் பணி மூலம் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
சிறிலங்கா குழுவிற்கும், இந்தத் தீர்மானத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபட்ட அனைத்து தூதுக்குழுக்களுக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னேற்றத்தை அங்கீகரிப்பதற்கும் எஞ்சியிருக்கும் சவால்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்துவதற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.
இந்த பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வரைவுத் தீர்மானத்தை வாக்கெடுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.