சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு 38 மில்லியன் டொலர்
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு சுமார் 38 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூக் லாபர் இதனை சபைக்கு அறிவித்தார்.
சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, எதிர்காலத்தில் சாத்தியமான வழக்குத் தொடுப்புகளுக்காக, சாட்சியங்கள் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயற்படுத்தப்படும்.
இதற்காக ஆண்டுக்கு 38 மில்லியன் 8 இலட்சத்து 400 டொலர் செலவு ஏற்படும் என்று பேரவைச் செயலகத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜூக் லாபர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையை சிறிலங்காவும் நட்பு நாடுகளும் கடுமையாக எதிர்த்திருந்தன.