மேலும்

காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை

தமிழ் தேசிய அரசியல் நொடிந்து கிடக்கிறது. உடைவுகளைச் சீர்செய்து நிமிர்த்த யாராவது வருவார்கள் எனப் பார்த்தால் கண்கெட்டிய தூரத்திற்கு யாரையும் காணவில்லை.

வாங்கிய அடிகளிலிருந்து எதையாவது கற்றுக்கொண்டு தமிழ் கட்சிகள் அந்த இடத்திற்கு வருவார்கள் எனப் பார்த்தால், அவர்களாலும் எதுவும் முடியவில்லை. தமிழ் மக்களை திரட்டவோ, வழிப்படுத்தவோ தகுதியற்றனவாக மாறிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் கட்சிகள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாது மீண்டும் மீண்டும் தவறான முடிவெடுத்து சிறுத்துவரும் நிலையை அவதானித்திருப்போம். சிதைந்து வருவதைக் கேள்வியுற்றிருப்போம்.

இந்நிலையில்தான் தமிழ் மக்கள் பேரவை மாதிரியானதோர் மக்கள் இயக்கத்தின் வரவு மிகுந்த அவசியப்படுகின்றது.

தேர்தல் அரசியலுக்கு அப்பாலான – மக்களை வழிநடத்தவல்ல ஓர் அமைப்பின் தேவை உணரப்படுகின்றது.

அவ்விடத்தை நிரப்பவென 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்களின் பேரபிமானத்தோடு வந்ததுதான் தமிழ் மக்கள் பேரவை.

அதன் செயற்பாட்டுக்காலம் மிகச் சிறிதெனினும் தமிழ் தேசிய அரசியல் களத்தில் நிகழ்த்திய மாற்றம் மிகப்பெரியது.

இன்றைக்கும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபே முன்மொழியப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி தவிர, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசியம் பேசிய அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் தீர்வுத் திட்டம் தமிழ் மக்கள் பேரவையினுடையது.

கட்சிகளால்கூட செய்யமுடியாதிருந்த பணியை தமிழ் மக்கள் பேரவை செய்திருந்தது. எனவேதான் 2025ஆம் ஆண்டில்கூட தமிழ் கட்சிகளைக் கூட்டிணைக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் மையப்பொருளாக இருந்தது.

அதேபோல ஜனநாயக தளத்தில் வடக்கு, கிழக்கை அரசியல் அபிலாசைகளின் அடிப்படையில் இணைக்கும் கூட்டியக்கமாகவும் தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நடத்திய ”எழுக தமிழ்” நிகழ்வுகள் இதற்குத் தகுந்த சாட்சி.

”எழுக தமிழ்” என்கிற அரசியல் அபிலாசை வெளிப்பாட்டுக்கான மக்கள் திரள் நிகழ்வுகளோடு, தமிழ் மக்கள் பேரவை இலகுவாகத் தமிழ் மக்கள்மயப்பட்டது.

இவ்வாறு மிக விரைவாக மக்கள்மயப்பட்ட அமைப்பொன்று நின்று நிலைத்திருப்பின் – அதே வேகத்தில் கிளை பரப்பியிருப்பின், தமிழ் தேசிய அரசியல் இன்று இவ்வளவு மோசமான வீழ்ச்சியைக் கண்டிராது.

தமிழ் தேசியம் பேசிய தமிழ் கட்சிகளின் சண்டைகளைப் பார்த்து விரக்தியடைந்த மக்கள் சிங்களப் பெரும்பான்மைவாதக் கட்சிகளின் பின்னால் போகவேண்டிய நிலை ஏற்பட்டிராது.

இந்தக் கட்சிகளுக்குப் பிரதியீடாகத் தமிழ் மக்கள் பேரவை வளர்ந்திருக்கும். மக்களை சரியாகத் திசைப்படுத்தியிருக்கும்.

2009 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தப்பட்டுவரும், தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இடக்கூடிய பலமான சிவில் தரப்பாகத் தமிழ் மக்கள் பேரவை வளர்ந்திருக்கும்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மையப்படுத்திய அரசியல் மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தின் பொருளாதார, வரலாறு, கலை, கலாசார விடயங்களை மேம்பாடடையச் செய்வதற்கான வேலைத்திட்ட எண்ணக்கருக்களும் தமிழ் மக்கள் பேரவையிடம் இருந்தது.

மிகுந்த நம்பிக்கையோடும் இத்தகைய எண்ணக்கருக்களோடும் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை திடீரென ஸ்தம்பிதம் அடைந்தமை தமிழ் மக்கள் நலன்சார் அரசியலுக்குப் பெரும் பின்னடைவாக மாறியிருப்பதை இன்று உணரமுடிகிறதல்லவா?

தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையை சரியாகக் கையாளத் தவறியமையும், தங்களுக்கிருந்த ஆளுமையை தமிழ் மக்கள் பேரவைக்குள் பரவலடையச் செய்து, மையத் தலைமைத்துவத்தை தவிர்த்து, அதனை சரியான திசையில் வழிநடத்தத் தவறியமையும் தான் அதன் ஸ்தம்பிதத்திற்குப் பிரதான காரணங்கள்.

இன்றைக்கு போர் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பைப் பேசுபொருளாக்கி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பன்னிரெண்டு கூட்டத்தொடர்கள் நடந்துவிட்டன.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகவே மாறிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், ஆர்வமுடைய நபர்களும் ஐ.நாவிடமோ, சர்வதேசத்திடமோ தமிழர்களுக்கு என்னவகையான நீதிப்பொறிமுறை வேண்டும் என்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியாதிருக்கின்றனர்.

சிலர் ஐ.சி.சி தான் சரியென்கின்றனர். சிலர் ஐ.சி.ஜே என்கின்றனர். இன்றும் சிலரோ ஐ.ஐ.ஐ.எம் வேண்டும் என்கின்றனர்.

இந்தப் பதினைந்தாண்டுகளில் தமிழர்களுக்கு எது தேவை என்பதை வலியுறுத்த முடியாத நிலையில் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் தமிழ் மக்களுக்கு நீதிகோரும் தரப்புகள் வந்துநிற்கின்றன.

இவ்வாறு தமிழ் மக்களின் மீதான இனவழிப்புக்கான நீதிக்கோரிக்கைகள் குழப்பமானவையாக மாறிக்கொண்டிருக்க, இலங்கை மீதான சர்வதேச பிடியும் தகர்ந்து வருகின்றது.

இந்தப் பதினைந்தாண்டுகளில் தமிழர்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு மாற்றான நலிவடையச்செய்யவல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இலங்கை அரசு வெற்றிகண்டிருக்கிறது.

தெற்கில் அரசியல் கொதிநிலைகள் ஏற்பட்டது. ஆட்சிகள் மாறின. பொருளாதார வீழ்ச்சி சூறையாகத் தாக்கியது.ஆனபோதிலும் தமிழர்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கின்ற நீதிக் கோரிக்கைகள் விடயத்தில் சிங்களப் பெரும்பான்மைவாத அரசிடம் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.

தமிழர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை உள்ளக ரீதியிலும், சர்வதேச தளத்திலும் எவ்வளவு ஆழமாகப் பலவீனப்படுத்த முடியுமோ அவ்வளவு ஆழமாகப் பலவீனப்படுத்தும் வேலையையே முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர்களுக்கிருக்கின்ற நியாயமான அரசியல் கோரிக்கைகள் நீர்த்துப் போகச் செய்வதிலும், ஊழல், அபிவிருத்தி, மொழிச் சலுகைகள் என மடைமாற்றம் செய்வதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசியம் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் வியாபாரத்திற்கான முதலீடு என தலைமுறை Z பிரிவினருக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓர் பலமுள்ள அரசு முன்னெடுக்கின்ற இத்தகைய வேலைத்திட்டங்களை சிதைந்து கிடக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புக்களாலும் தற்போதைக்குக் கையாள இயலாது.

அவர்களால் ஒரு மேசையில் அமர்ந்து பேசக்கூட முடியாத சூழல்தான் இன்றும் நிலவுகின்றது.

இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ் மக்கள் பேரவையின் மீள்வரவு அவசியமானது.

தமிழ் மக்கள் பேரவை மாதிரியான ஓர் அரசியல் செயற்பாட்டியக்கத்தை மீளக்கட்டியமைப்பது சாத்தியமற்றது.

இங்கிருக்கின்ற கட்சிகளை, சிவில் அமைப்புக்களை இனியும் ஓரணியில் திரளவைப்பதும் சிரமானது.

எனவே காலதேவை கருதியும், இன நலன் கருதியும் தமிழ் மக்கள் பேரவையை மீளக்கொணருவதுதான் பொருத்தமானது.

-ஜெரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *