காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி கைது
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பகுதியில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்னவை இன்று கைது செய்துள்ளனர்.
ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது, சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன பணியாற்றியிருந்தார்.
அவரது கட்டுப்பாட்டில் இருந்த இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே, காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
தடுப்பு முகாமில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றை அடிப்படையாக வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் 24 அவது தளபதியாக பணியாற்றிய அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, 2020 ஜூலை 15ஆம் திகதி தொடக்கம், 2022 டிசெம்பர் 18ஆம் திகதி வரை அந்தப் பதவியில் நீடித்திருந்தார்.
பிந்திய செய்தி.
ஆள் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்னவை விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.