6 மாதங்களில் 144,379 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
சிறிலங்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 144,379 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 55,695 பெண்களும், 88,684 ஆண்களும்,வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள நாடுகளில், குவைத் 38,806 தொழிலாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 28,973 பேருடனும், கட்டார் 21,958 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே, குறிப்பாக கிழக்கு ஆசியாவில், வேலை தேடும் தொழிலாளர்களின் போக்கு அதிகரித்து வருகிறது.
ஜனவரி தொடக்கம் ஜூன் மாதங்களுக்கு இடையில் 6,073 தொழிலாளர்கள் ஜப்பானுக்கும், 3,134 பேர் தென் கொரியாவிற்கும் புலம்பெயர்ந்தனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3.73 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த 3.14 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 18.9% அதிகமாகும்.
ஜூன் மாதத்தில் மட்டும், வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவுக்குஅனுப்பியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில், மொத்த பணம் அனுப்புதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என்றுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்பார்க்கிறது.