சிறிலங்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்
சிறிலங்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மீரிகம, போத்தல பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் எவ்யூ.வூட்லர் நேற்றுக்காலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தரவுகள் சிலவற்றை வெளியிட்ட பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல், ஜூலை 13ஆம் திகதி வரையான, 7 மாத காலப்பகுதியில், 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவற்றில்,, 50 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவை என்றும், 18 சம்பவங்கள் தனிப்பட்ட சம்பவங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 34 பேர் குற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர் வூட்லர், மேலும் 39 பேர் காயம் அடைந்தனர் என்றும் அவர்களில் 30 பேர் குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் ரி-56 துப்பாக்கிகள் 23, கைத்துப்பாக்கிகள் 46, மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட சுடுகலன்கள் 1,165 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, 24 துப்பாக்கிதாரிகள், தப்பிச்செல்ல உதவிய 15 பேர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய அல்லது திட்டமிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.