இந்திய நிறுவனத்திடம் மின்னணு அடையாள அட்டை திட்டம்- வீரவன்ச கவலை
மின்னணு தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தேசிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம், கைரேகைகள், விழித்திரை பதிவு மற்றும் குடியிருப்பு விபரங்கள் போன்ற உயிரியல் தகவல்கள் உள்ளிட்ட, சிறிலங்கா மக்களின் உணர்திறன்மிக்க தரவுகளை அணுக இந்திய நிறுவனத்திற்கு அனுமதிக்கிறது.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், 2021 ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது.
அதன்படி ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து ஒரு இந்திய நிறுவனம் மின்னணு தேசிய அடையாள அட்டையை உருவாக்கும். அந்த நேரத்தில் அந்த உடன்பாடு செயற்படுத்தப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், 2023 ஆம் ஆண்டில் 3 மில்லியன் ரூபா ஒதுக்கி இந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.
தற்போது, 5 பில்லியன் ரூபா முதலீட்டில் கிட்டத்தட்ட 99 வீதமான தொழில்நுட்ப பணிகள், உள்நாட்டிலேயே ஆட்பதிவுத் திணைக்களத்தினால் முடிக்கப்பட்டுள்ளன.
இதற்காக, கைரேகை மற்றும் விழித்திரை ஸ்கானர்கள் மற்றும் தனிப்பட்ட அடையாள அமைப்புகள் உள்ளிட்ட தேவையான அனைத்து கருவிகளும் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிர்வாகம் பூர்த்தி செய்யப்பட்ட உள்ளூர் முறைமையை வேண்டுமென்றே ஓரங்கட்டிவிட்டது.
சிறிலங்கா உருவாக்கிய பொறிமுறை குறைபாடுடையது என்றும், இந்தியாவின் தேசிய ஸ்மார்ட் அரசாங்க நிறுவனத்திற்கு (NISG) இதன் கட்டுப்பாட்டை மாற்றுமாறு திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது.
கேள்விப்பத்திர செயல்முறை இந்தியாவில் பிரத்தியேகமாக நடத்தப்பட்டதுடன், இந்திய நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டன.
எந்தவொரு சிறிலங்கா நிறுவனங்களும் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டன.
இந்த கேள்விப்பத்திர ஒப்பந்தப்படி, இந்திய நிறுவனம் மக்களின் நடமாட்டம், தங்குமிட விவரங்கள் மற்றும் நாட்டின் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை அணுக முடியும்.
ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், தரவு மீறல் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் 10வீத பொறுப்பை மட்டுமே ஏற்கும்.
சிறிலங்காவின் மின்னணு தெசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.
தேசிய இறையாண்மை மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை உள்ளதால், இந்த நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.