மேலும்

வவுனியாவில் பெரும் பதற்றம் – சிறிலங்கா காவல்துறையால் ஒருவர் பலி

வவுனியா-  கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இரண்டு உந்துருளிகளில் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் போக்குவரத்து காவலர்கள்,  அந்த வீதியால் உந்துருளியில்  பயணித்த  ஒருவரை துரத்திச் சென்றுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையினர், அவரது வாகன சக்கரத்தில் தடையை ஏற்படுத்தியதால்,  நிலை தடுமாறி கீழே விழுந்த, கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை  என்ற 58 வயதுடையவர்,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினரின் இரண்டு உந்துருளிகளையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்து, அடாவடியான இந்தச் செயற்ப்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் எனப் பொதுமக்கள்  கோரியதால் குழப்பநிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்ற விடாமல் தடுத்த  இளைஞர்கள் நீதிபதி  வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இதையடுத்து வவுனியா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து, இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக உறுதியளித்து, சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் காவல்துறையினர்  மீது நம்பிக்கை இல்லை நீதிபதி வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றதால் பதற்ற நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்,  பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் காவல்துறையினரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பொதுமக்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

அதேவேளை, உயிரிழந்தவரின்  சடலத்திற்கு அருகில் லலித் பண்டார என்ற காவல்துறை அதிகாரியின்  பெயர் பட்டியும், பதவி சின்னங்களும் காணப்பட்டன.

இந்தச் சம்பவத்தினால், அந்த பகுதியில் பெருமளவான  காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன். சிறப்பு  அதிரடிப்படையினர், கலகதடுப்பு காவல்துறையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *