எரிபொருள் சேமிப்புத் திறன் – சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு
சிறிலங்காவின் எண்ணெய் சேமிப்பு திறன் குறித்து, அரசாங்கத் தரப்பு, முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் மோதல்கள் தீவிரமடைந்த போது, எரிபொருள் தட்டுப்பாடு வராது என்றும், இரண்டு மாத காலத்திற்கு தேவையான எண்ணெய் இருப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியிருந்தார்.
இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூறி விட்டு, அண்மையில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் அறிவித்தமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில்,, இரண்டு மாத காலத்திற்கு எரிபொருளை சேமித்து வைக்க தேவையான, களஞ்சிய வசதிகள் சிறிலங்காவில் இல்லை என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறியுள்ளார்.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணவும், இரண்டு மாதங்களுக்கான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை என்றும், பல ஆண்டுகளாக சேமிப்பு வசதிகளை பழுதுபார்க்க தவறிவிட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.